நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடைபெற்ற குரலிசைப் பயிலரங்குபற்றிய விளக்கம்.

மக்களிடமிருந்து பணம்பெற்று நடாத்தப்படும் எந்தவொரு செயலுக்கும் இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மை, உண்மைத்தன்மை, பன்முகப்படுத்தல் போன்ற அடிப்படை விழுமியங்களுடன் தமிழ்ச்சங்கம் இயங்குகிறது. எமது செயற்பாடுகள் தன்னிச்சையானவை அல்ல என்பதையும் இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும். குரலிசைப்பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களாயினும் அவர்தம் பெற்றோராயினும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் ஏதாவது தவறாக இருப்பின் உடனடியாகவே சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

சமூக ஊடகங்களில் குரலிசைப்பயிலரங்கு தொடர்பாகத் தவறான தகவல்கள் பதியப்பட்டிருப்பதால், தமிழ்ச்சங்கம் தனது செயற்பாடுகளை வெளிப்படையாகவும், இணைந்தசெயற்பாட்டினூடாகவுமே நெறிப்படுத்துகிறது என்பதனை அறிவிக்குமுகமாக இந்த «செயற்பாட்டு விளக்கம்» எழுதப்படுகிறது.  

 

குரலிலை வித்துவான் அனந்த் வைத்தியநாதன் அவர்களால் 11.08.2017 குரலிசைப்பயிலரங்கு ஆரம்பமாகியது. இரண்டு நாட்கள் அனைவருக்குமான ஒருமித்த பயிற்சி நடைபெற்றது. 13.08.2017 இலிருந்து 21.08.2017 வரை எல்லோருமே இருந்தனர். இரண்டுமுறை மாணவர்கள் அனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களது திறமைக்கு ஏற்ப, கற்பித்தல் வகுப்புகள் நடைபெற்றன. மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகப் பயிற்சிமண்டபத்தினை மாற்றியமைக்க நேர்ந்தது. 23.08.2017 இலிருந்து ~எம்மவர்களின் ஸ்வர உதயம்| இசைநிகழ்ச்சிக்காக பயிலரங்கு நடைபெற்றது. 

 

குரலிசைப்பயிலரங்குபற்றி திட்டமிடப்பட்டபோது ஆர்வமுள்ளோர் தமிழ்ச்சங்க இணையத்தளத்தினூடாகப் பதிவுகளை மேற்கோள்ளுமாறு கேட்டிருந்தோம். நூற்றுக்கும் அதிகமானவர்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனவே, இவர்களுடனான கூட்டத்தினை ஒழுங்குசெய்து குரலிசைப்பயிலரங்கின் உள்ளடக்கத்துடன் செலவுகள் தொடர்பான பட்டியலும் போட்டுக்காட்டப்பட்டது. அதோடு நின்றுவிடாது, செலவினை எவ்வாறு குறைக்கலாம் என்ற உரையாடலும் நடைபெற்றது. மிகக்குறைந்த கட்டணமாக அங்கத்தவர்களுக்கு 2500 குரோணர்களும், அங்கத்தவர் அல்லாதவர்களுக்கு 3250 குரோணர்களும் கோரப்பட்டது. 

 

குரலிசைப்பயிலரங்கு முடிவில் இசைநிகழ்ச்சி நடாத்துவதானால் செலவு மிகக்குறைந்தது 35000 குரோணர்களால் அதிகரிக்கும் என்பதனால் இசைநிகழ்ச்சியை தவிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை, அரசஉதவிக்காகத் தமிழ்ச்சங்கம் விண்ணப்பத்தினை அனுப்புவதாகவும் உதவி கிடைக்கும் பட்சத்தில் இசைநிகழ்வினை நடாத்தலாம் என்ற தீர்மானத்தினைப் பெற்றோருடன் இணைந்து முடிவெடுத்திருந்தோம்.

 

பெற்றோர்குழு உறுப்பினர்களாக நந்தினி பாக்கியநாதன், வனிதா சிவகுமார், ரமேஸ் சிவக்கொழுந்து, லோசிகா காந்தீஸ்வரன், யது முகுந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.  பெற்றோர் குழுவின் கடமைகள் கூட்டத்திலே நிர்ணயிக்கப்பட்டன. குரலிசைப்பயிலரங்கின் அனைத்து ஒழுங்குகளையும் ஏனைய பெற்றோருடன் இணைந்து, பெற்றோர்குழு செயற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.

 

குரலிசைப்பயிலரங்கு நடைபெறும் என நிட்சயமானவுடன் முன்பதிவு செய்பவர்கள் கட்டணத்தொகையை செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டது. ஆரம்பத்தில் 40 மாணவர்கள் மட்டுமே பதிவுசெய்திருந்தனர். பின்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது. விடுமுறை காரணமாகச் சிலர் ஆரம்பத்திலேயே பட்டறையில் தம்மால் கலந்துகொள்ளமுடியாது என்று கூறியிருந்தனர். ஆனாலும், குரலிசைப்பயிலரங்கு ஆரம்பித்த பின்னர் விடுமுறைமுடித்து வந்த சிலர் பயிலரங்கில் இணைந்துகொண்டனர். குரலிசைப்பயிலரங்கில் பயிலவிரும்பும் அனைவருக்கும் இடமளிக்க விரும்பினாலும் நடைமுறைச்சிக்கலினால் சிலருக்கு அனுமதிவழங்க முடியவில்லை.

 

தொடர்ந்து நடைபெற்ற பெற்றோர் கூட்டங்களில் செலவுபற்றிய உரையாடல் நடைபெற்றதுடன், குரலிசைப்பயிலரங்கின் உள்ளடக்கம், தனிப்பட்டவகுப்புகளின் எண்ணிக்கை, நேரம் என அனைத்தும் பெற்றோர் முன்னிலையில், அவர்களின் சம்மதத்துடனேயே தீர்மானிக்கப்பட்டது.

 

ஆசிரியருக்கான மூன்றுநேர உணவினை அனைவரும் பகிர்ந்துகொள்வதன் மூலம் செலவினைக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அனைவரும் சமமாகப் பங்களிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உணவு வழங்கமுடியாதவர்கள் அதற்கான செலவினை வழங்கினால் உணவினைக் கொள்வனவு செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் நிர்வாகத்தின் சார்பில் இருவர், பெற்றோர் சார்பில் இருவர் ஆசிரியருடன் தங்கியிருக்கவேண்டும் என்பதனால் மதியஉணவு ஐவருக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும் பெற்றோர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

 

ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இடையே மூன்று சந்திப்புகள் நடைபெற்றன. முதலாவது சந்திப்பில் தனிப்பட்ட வகுப்புகளில் ஒரு மாணவர் கற்பது மிகக்குறைவாகவே உள்ளது என்பதை ஆசிரியர் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறினார். மாணவர்களின் கட்டணத்தொகைக்குப் பிரயோசனமாக இருக்கும்வகையில் தனிப்பட்ட முறையில் கற்பித்தலைத் தவிர்த்து 6 அல்லது 7 மாணவர்கள்கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்வோம் என ஆசிரியர் கேட்டுக்கொண்டதைப் பெற்றோரும் வரவேற்றனர். பெற்றோரின் சம்மதத்துடனேயே தனிப்பட்ட ரீதியில் ஆசிரியருடனான கற்றலுக்கான நேரம், குழுக்களுடனான பயிற்சிநேரமாக மாற்றப்பட்டது. 

 

இந்நிலையில் அரசஉதவிக்கான கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. ஆசிரியருடனான இரண்டாவது சந்திப்பில் நாம் இதுபற்றி அறிவித்தோம். அத்துடன் மாணவர்களின் திறமையினை வெளிப்படுத்துவதற்காக இசைநிகழ்வினை மேலதிக கட்டணம் பெற்றோரிடமிருந்து அறவிடாமல் நிகழ்த்தலாம் என்றும் அறிவித்தோம். மாணவர்களிடையே பாரிய தரவேறுபாடு காணப்பட்டதால் ஆசிரியர் பல உத்திகளைக் கையாண்டு ஒரு சிறப்பான இசைநிகழ்வினை நடாத்தித்தந்தார் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. 

 

ஆசிரியரின் கருத்திற்கேற்ப, மாணவர்களுக்கான பயிற்சிநேரங்கள் அறிவிக்கப்பட்டு அவை ஆசிரியரினால் வழிநடாத்தப்பட்டன. இறுதிநாட்களில் யார் பயிற்சிமண்டபத்திற்கு முதலில் வருகை தருகிறாரோ அவர் முதலில் பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார். இந்த ஒழுங்கினை பெற்றோர்குழு பட்டியல் தயாரித்து அதற்கேற்றவாறு மாணவர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

 

மாணவர்கள் மிகக்குறைந்தது 3 பாடல்களை ஆயத்தம் செய்திருக்கவேண்டும் எனக் கூறப்பட்டது. கரோகே இசையினை தயாராக வைத்திருக்கவேண்டும் என்று நாம் பெற்றோர் கூட்டங்களில் கூறியிருந்தபோதும் பலருக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், உதவிகள் தேவைப்பட்டன. இதற்காக ஒருவரை நாம் இரண்டு நாட்கள் உதவிக்கு அழைத்தோம். இதற்கான செலவினை குரலிசைப்பயிலரங்கு வருமானத்தில் இருந்தே ஈடுசெய்தோம். 

 

சில மாணவர்கள் தங்கள் கரோகே, பாடல் தயாராக இல்லாத காரணத்தினால் அதிக நேரம் காத்திருந்து பயிற்சிகளை மேற்கொண்டனர். சிலர் நேரம் போதாமைகாரணமாக அவர்களது இறுதிப் பயிற்சியினை சனிக்கிழமை இசைநிகழ்ச்சிக்கு சற்றுமுன்பாகவே பெற்றுக்கொள்ள நேர்ந்தது. இதையும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நாம் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

 

25.08.2017 ஒரு விமர்சனக்கூட்டம் நடாத்துமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போது பயிற்சிப்பட்டறையில் பங்குகொண்ட 54 மாணவர்களில் மூவரின் பெற்றோர் பயிற்சிப்பட்டறையின்போது செய்திப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டவிதம் மேலும் சிறப்பாக இருந்திருக்கவேண்டும் என்ற தமது விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள். வேறு விமர்சனங்கள் குறிப்பிடப்படவில்லை. மாறாக, பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவே அங்கு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒரு பொதுநிகழ்வில் அனைவரையும் திருப்திப்படுத்துவது இலகுவான காரியமல்ல என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

 

பெற்றோர் குழுவினருடனும், நிர்வாகத்தினருடனும் தங்களது விமர்சனங்களை, சவால்களை, போதாமைகளை, ஆலோசனைகளை உரையாடிய பெற்றோர்களுக்கான தீர்வுகளை, நாம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டமையாலேயே குரலிசைப்பயிலரங்கம் எதுவித தடங்கல்களும் இன்றி சிறப்புற நடைபெற்றது. மாணவர்களின் நலனுக்கா பலவிதமான விட்டுக்கொடுப்புகளுடன் பயிலரங்கினை வெற்றிகரமாக நிகழ்த்த உதவிய அனைத்துப்பெற்றோருக்கும் நோர்வே தமிழ்ச்சங்கம் நன்றியினைக் கூறிநிற்கிறது.

 

 

நாம் பெற்றோருடனான சந்திப்புகளில் இசை நுணுக்கங்கள் தெரிந்தவர்களுக்கு இப்பயிலரங்கு அதிக பயனைத்தரும் என்று குறிப்பிட்டிருந்ததைக் கலந்துகொண்ட 15-16 வயதிற்கு மேற்பட்டவர்களின் கருத்துகள் உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாம் எதிர்பார்த்திருந்ததைவிட மிகச்சிறப்பாக ~எம்மவர்களின் ஸ்வர உதயம்| நடைபெற்றது. அதில் மாணவர்களின் திறமை அதிகரித்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. பார்வையாளர்கள், பெற்றோரின் பாராட்டுகளுடன் பயிலரங்கு இனிதே முடிவுற்றது.

 

இது எம்மவர்களின் இசைத் திறமையை முன்னெடுப்பதற்கான முதலாவது பயிலரங்காகும். புதிய திட்டங்களில் ஏற்படும் கற்றல் செயற்பாடு, இந்தத் திட்டத்திலும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் பெற்றோரின் அமோக ஆதரவின் காரணமாகவும், அவர்களுடைய வேண்டுகோளின் காரணமாகவும் இதேபோன்று மிகவும் வெளிப்படையான முறையில் எதிர்கால பயிற்சிப்பட்டறைகளையும் ஒழுங்குசெய்யவுள்ளோம். 

 

நோர்வே தமிழ்ச்சங்கம்
30.08.2017

Vi ønsker samle alle kommentarer under dette innlegget på fb.

     

தமிழ்ச்சங்கத்தின் 38 ஆவது ஆண்டில் 
நோர்வேவாழ் தமிழரின் குரலிசை சிறக்க, குரலிசைப்பயிலரங்கு !!!

குரலிசை வித்துவான் அனந்த் வைத்தியநாதனுடன் இணைந்து நோர்வே தமிழ்ச்சங்கம் நாடாத்திய குரலிசைப்பயிலரங்கம் நேற்றைய இசை நிகழ்வுடன் முடிவடைந்ததை அனைவரும் அறிவீர்கள். 

இக்பயிலரங்கத்தில் பங்குகொண்ட தங்கள் கருத்துகளை நாம் அறிய விரும்புவதாலும், இப்படியான பயிலரங்கம் ஒன்றினை எவ்வாறு தமிழ்ச்சங்கம் நடாத்தியது என்பதனை எமது மக்களும் அறியவேண்டும் என்று விரும்புவதாலும் எமது பயிலரங்கத்தினால் தங்களுக்குக் கிடைத்த பலன்கள், தமிழ்ச்சங்கம் பயிலரங்கத்தினை ஒழுங்குசெய்தமுறை, செய்திப்பரிமாற்றம் மற்றும் உங்கள் கருத்துகளை, விமர்சனங்களை காத்திரமான முறையில் பதியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Vi ønsker at dere som deltok i workshop med Ananth Vaithiyanatham skriver konstruktive tilbakemeldinger om organisering, åpenhet, informasjon, og utbyttet dere har hatt gjennom denne. Dette vil føre til ytterligere bedring for TS og våre fremtidige workshop. Dere kan skrive på tamilsk, norsk eller engelsk. Takk for deres bidrag.

Vi ønsker samle alle kommentarer under dette innlegget på fb.